schema:text
| - Fact Check
ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டதா?
ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி. பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு. இந்தியா இவ்வளவு உயர்வான இடத்திற்கு சென்றதுக்கு நம் தேசத்தலைவர் மோடிஜி உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்னும் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை என்பது 1945 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட உலக நாடுகள் அடங்கிய ஒரு கூட்டமைப்பாகும். இதில் இடம்பெற்றிருக்கும் உறுப்பு நாடுகளில், ஐந்து நாடுகள் மட்டுமே சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகளும் ஐநா சபையின் பாதுகாப்பு கூட்டமைப்பில் வீட்டோ அதிகாரம் கொண்டவையாக விளங்குகின்றன. ஐநாவில் நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் ஒரு தீர்மானம் குறித்த கருத்துக்களை அளித்தாலும், வீட்டோ பவர் கொண்ட நாடுகளின் கருத்துக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் இடம் பெற்றிருக்கும் இந்தியா, வீட்டோ உரிமையைப் பெற பல காலங்களாக முயற்சித்து வருகிறது.
இச்சூழ்நிலையில், பேஸ்புக்கில் ஐநா சபை மற்றும் பிரதமர் மோடி குறித்த பதிவொன்று வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளமான முகநூலில் “ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி. இங்கிலாந்து பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் ஒப்புதல். பாரத பிரதமர் மோடிஜி உலக நன்மைக்காக செயல்படுகிறார். அதனால் உலகமே இந்தியாவை நேசிக்கிறது. இந்தியா இவ்வளவு உயர்வான இடத்திற்கு சென்றதற்கு நாம் தேச தலைவர் மோடிஜி உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்” என்னும் வாசகங்கள் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி என்று பரவுகின்ற குறிப்பிட்ட அந்த பதிவின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தோம்.
முதலாவதாக, சமீபத்தில் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தியாவிற்கான வீட்டோ அதிகாரத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் நிரந்த உறுப்பினர் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனை, லைவ் மிண்ட் செய்தித்தளத்தில் நம்மால் செய்தியாக கண்டறிய முடிந்தது.
மீண்டும், கடந்த 2020ம் ஆண்டு பிரான்ஸ் இந்த கோரிக்கைக்கு மீள் ஆதரவு அளித்துள்ளது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், இதனைத் தொடர்ந்து ஐநா சபை இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரம் அளித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.
தொடர்ந்து, ஐநா சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தபோது அதில் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக பதவி வகிக்கும் பத்து நாடுகளின் பட்டியலில், இரண்டாண்டு பதவிக்காலத்தில் இந்தியா பட்டியலில் உள்ளது. வருகின்ற 2022 ஆம் ஆண்டு அப்பதவிக்காலம் முடிவடைகிறது.
நிரந்தரமான உறுப்பு நாடுகள் பட்டியலில், வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், தற்போது புதிதாக இந்த மூன்று நாடுகளும் இந்தியாவின் வீட்டோ அதிகார கோரிக்கையை ஆதாரிப்பதாக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.
எனவே, இந்தியாவிற்கு ஐநா சபையின் நிரந்த உறுப்பினர் பதவி மற்றும் வீட்டோ அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதும், குறிப்பிட்ட அந்த மூன்று நாடுகளும் இந்தியாவை வீட்டோ அதிகாரத்திற்காக ஆதரவளித்த செய்தி பழையது என்பதும், சமீபத்தில் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
Conclusion:
ஐநா சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் பதவி; பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் என்று பரவுகின்ற பதிவு முறையே தவறானது; பழைய செய்தி என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
United Nations Website: https://www.un.org/securitycouncil/content/current-members
Live Mint:https://www.livemint.com/Politics/BbC4OXJSOHKiDLCVyiYPXP/US-UK-France-support-Indias-permanent-membership-in-UNSC.html
BS: https://www.business-standard.com/article/international/france-backs-india-s-candidacy-for-permanent-seat-in-un-security-council-120091000645_1.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|