schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அபிஷேகத்துக்கு பால் தரும் புங்கநூர் பசு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பசுவின் புகைப்படம் ஒன்று “இந்த பசுவின் விலை ரூ 12 கோடி. ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான். இது புங்கநூரு ஜாதி பசு. ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் தருகிறது. இந்த ஜாதி பசுவின் பால்தான் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த பசுவின் தரிசனம் பெற்றால் கைநிறைய சுப பலன்கள் கிட்டும் என்று நம்பிக்கை. நிறையபேருக்கு தரிசன அனுபவம் கிடைக்கப் பகிரவும்” என்று வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 100 லிட்டர் அபிஷேகப் பால் கொடுக்கும் விலையுயர்ந்த புங்கநூர் பசு என்று பரவுகின்ற புகைப்படத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து படிப்படியாக ஆராய்ந்தோம்.
முதலில், குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் பசுவின் புகைப்படத்தைக் க்ராப் செய்து ரிவர்ஸ் சர்ச் இமேஜ் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, அந்த வைரல் தகவலானது சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது.
மேலும், குயின் ஆப் ஏசியா, குயின் ஆப் பாகிஸ்தான் என்கிற தலைப்பில் குறிப்பிட்ட பசு சார்ந்த பல புகைப்படங்கள் கிடைத்தன.
கூடவே, “ஏசியா பிக்கெஸ்ட் கவ் மண்டி கராச்சி” என்கிற பேஸ்புக் பக்கம் ஒன்றும் கிடைத்தது. அதில் 2018 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், வைரலாகும் புகைப்படத்தை ஒத்த பசு ஒன்று “குயின் ஆப் பாகிஸ்தான்” என்கிற தலைப்பில் காணக்கிடைத்தது.
மேலும், பாகிஸ்தானில் பிரபலமான சாகிவால் பசு இனத்தை ஒத்திருந்தது குறிப்பிட்ட வைரல் புகைப்பட பசு.
தொடர்ந்து, குறிப்பிட்ட புங்கநூர் பசு குறித்த விவரங்களைத் தேடியபோது, புங்கநூர் பசுவானது 4 அடி உயரமே வளரக்கூடிய குட்டைமாடுகள் வகையைச் சேர்ந்த பாரம்பரிய ரகம்.
நாட்டு மாடு வகையைச் சேர்ந்த சித்தூர் பாரம்பரிய இந்த வகை இனம் பெரும்பாலும் அழியத் துவங்கிவிட்ட பட்டியலில் உள்ளது. இதுகுறித்த தகவல்கள் பசுமை விகடன் இதழில் நமக்குக் கிடைத்தது. மேலும், இந்த வகை மாடுகளைப் பாதுகாப்பதற்காக ‘மிஷன் புங்கநூர்’ என்கிற செயல்பாட்டினையும் கடந்த வருடம் ஆந்திர அரசு முன்னெடுத்துள்ளது.
2011 ஆம் ஆண்டு வெளிவந்த தி இந்து கட்டுரையில், இதன் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், கவுரவத்தின் அடையாளமாக இருப்பதாலும் புங்கநூர் மாடுகள் 1 லட்சம் வரை விலையில் கிடைக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, 2017 ஆம் ஆண்டு புங்கநூர் மாடு என்றும், திருப்பதி பெருமாளுக்கு அபிஷேக பால் தரும் மாடு என்றும் நிலைத்தகவல் ட்விட்டரில் வைரலாகிய நிலையில் “பாகிஸ்தானில் குர்பானி கொடுப்பதற்காக அலங்காரம் செய்யப்பட்ட மாடு இது. அதன் மற்றொரு புற தோற்றம் இது. எனவே, இது புங்கநூர் குட்டை மாடு இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட ட்விட்டர் புகைப்படத்தில் உள்ள மாடும், திருப்பதி தேவஸ்தான புங்கநூர் மாடு என்று வைரலாகும் புகைப்படத்தில் உள்ள மாடும் ஒன்று என்பது உறுதியாகத் தெரிந்தது.
மேலும், ட்விட்டர் புகைப்படத்தின் மூலமாக வைரலாகும் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் மாடு பசுவே இல்லை என்பது உறுதியானது.
குர்பானி கொடுப்பதற்காக தயார் செய்யப்படும் மாடுகள் அனைத்திற்குமே வைரல் புகைப்படத்தில் இருப்பது போன்றே அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்ட இந்த வீடியோவில் காணலாம்.
மேலும், புங்கனூர் பசுக்களைப் பொறுத்தவரையில் அவை 3 லிட்டர் முதல் 6 லிட்டர் வரை பால் கரக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று வைரலான மற்றொரு புகைப்படம் குறித்த விளக்கம், இந்தியா டுடே இதழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அதில், திருப்பதி திருமலா தேவஸ்தானத்தின் கோசாலை இயக்குனர் ஹர்நாத் ரெட்டி என்பவர், திருப்பதி தேவஸ்தானத்தில் கிட்டதட்ட 3000 பசுக்களுக்கு மேல் இருப்பதாகவும், ஓங்கோல், கிர் மற்றும் சாகிவால் பசுக்களும் அதனுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எல்லா பசுக்களின் பாலுமே அபிஷேகம் மற்றும் பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு கோயில் சார்ந்த விஷயங்களுக்கு உபயோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புங்கநூர் பசுக்கள் அழியும் நிலையில் இருப்பதால் அவை பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அவை சில லிட்டர் பாலே கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து, குறிப்பிட்ட வைரல் பதிவில் இருக்கும் புங்கநூர் பசு; 12 கோடி ரூபாய் விலை; தினசரி 100 லிட்டர் பால் கறவை என்கிற அனைத்தும் தவறான தகவல் என்பது உறுதியாகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 100 லிட்டர் அபிஷேகப் பால் கொடுக்கும் விலையுயர்ந்த புங்கநூர் பசு என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook: https://www.facebook.com/watch/?v=220552095219934
TTD: https://www.tirumala.org/SriVenkateswaraGosamrakshanaTrust.aspx
Twitter: https://twitter.com/kovai_su_ba/status/856805388745928704/photo/1
YouTube: https://www.youtube.com/watch?v=d-1acUdic5M&t=550s
YouTube: https://www.youtube.com/watch?v=9Yy1iSrwIIM
The Hindu: https://www.thehindu.com/news/cities/Hyderabad/punganur-cow-a-craze-among-the-rich/article2636547.ece
DT Next: https://www.dtnext.in/News/TopNews/2017/04/27024520/1032326/Tirumala-temple-comes-to-rescue-of-vanishing-Punganur-.vpf
The Hindu: https://www.thehindu.com/news/cities/Vijayawada/scientists-launch-study-to-help-punganur-cow-back-on-its-knees/article25736844.ece
Facebook: https://www.facebook.com/DesiKheti/photos/pcb.747350225403753/747349968737112
Vikatan: https://www.vikatan.com/literature/agriculture/78587-punganur-cow-is-in-danger-stage
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
September 27, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 24, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 15, 2022
|