schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
பக்ரைன் உணவகத்தில் இந்திய மேலாளர் ஒருவர் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்தியதாக செய்தி ஒன்று வைரலாகிறது.
நடந்தது என்ன?
பக்ரைன் மனாமா பகுதியில் செயல்பட்டு வருகின்ற பிரபல இந்திய உணவகம் ஒன்றில் உணவருந்தச் சென்ற ஹிஜாப் அணிந்த இளம்பெண் ஒருவரை அங்கு பணிபுரியும் மேலாளர் ஒருவர் அதற்காக தடுத்து நிறுத்தியுள்ளார். ஹிஜாப் அணிந்திருந்த அப்பெண் உணவகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று மறுத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இச்செய்தி அவருடன் உணவருந்தச் சென்ற மற்றொரு தோழி மூலம் பரவிய நிலையில், பக்ரைன் அரசு குறிப்பிட்ட உணவகத்தை மூடியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இந்த செய்தி பரவிய நிலையில், “பக்ரைனில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்காத இந்திய மேலாளர்” என்பதாக குறிப்பிட்ட செய்தி வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துபாய் செல்ல முதலமைச்சர் அணிந்த ஜாக்கெட் விலை 17 கோடி என்று சொன்னாரா நிதியமைச்சர்?
பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய இந்திய மேனேஜர் என்பதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கடந்த வாரம், சமூக வலைத்தளங்களில் ஒரு இளம்பெண் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியது. குறிப்பிட்ட வீடியோவில் பேசிய மரியம் நஜி என்கிற அந்த இளம்பெண், பக்ரைனில் செயல்பட்டு வருகின்ற இந்திய உணவகமான Lantern-ல் நுழைய மேலாளர் தனது தோழிக்கு தடை விதித்தாகவும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தினால் அந்த உணவக மேலாளர் அவருக்கு அனுமதி மறுத்ததாகவும் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வீடியோ வெளியானதற்கு மறுநாள் Lanterns உணவகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுகுறித்த விளக்கம் ஒன்றினை வெளியிட்டிருந்தது.
அதில், “Lanterns எல்லாரையும் வரவேற்கும் மனப்பாங்கு கொண்டது. கிட்டதட்ட 35 வருடங்களாக இந்த அழகான ராஜ்ஜியமான பக்ரைனில் அனைத்து தேசத்தவருக்கும் உணவளித்து வருகிறோம். இந்த உணவகம் அனைவரும் குடும்பத்துடன் வந்து உணவருந்தி, அவர்களுடைய வீடு போன்றே நினைக்கும் வகையிலேயே செயல்பட்டு வருகின்ற இடம்.
ஆனால், குறிப்பிட்ட இந்த நிகழ்வு, எங்களுடைய மேலாளர் ஒருவரால் தவறுதலாக நடைபெற்றுள்ளது. அவர் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவருடைய செயலை வைத்து எங்களை தயவுசெய்து எடை போடாதீர்கள்” என்பதாக விளக்கமளித்துள்ளது.
எனினும், பக்ரைன் சட்டம் 15, 1986ன் படி குறிப்பிட்ட உணவகத்தை மூடியுள்ளது அந்நாட்டு அரசு. மேலும், அந்த மேலாளரையும் விசாரணைக்கு எடுத்துள்ளதாக BTEA (The Bahrain Tourism and Exhibition Authority) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் இச்செய்தி வைரலாகப் பரவிய நிலையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பரவிய இச்செய்தியில், இளம்பெண்ணை ஹிஜாப் அணிந்திருந்ததற்காக உள்ளே விடாத மேலாளர் ஒரு இந்தியர்; தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அனுமதி மறுக்கப்பட்ட ஹிஜாப் பெண்ணுடன் உணவருந்தச் சென்றிருந்த தோழியான மரியம் நஜியின் வீடியோவிற்கு பின்பாகவே இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது என்கிற நிலையில், அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் “அனுமதி மறுத்த மேலாளர் ஒரு இந்தியர் அல்ல; அவர் ஒரு பிரிட்டிஷ்” என்று விளக்கமளித்துள்ளார். எனவே, குறிப்பிட்ட நிகழ்விற்கு காரணமான மேலாளர் இந்திய உணவகத்தில் பணிபுரிந்த பிரிட்டிஷ் என்பது தெளிவாகிறது.
மரியம் குறிப்பிட்டிருந்த நபர் குறித்து நாம் மேலும் விரிவாக தேடியபோது, Gulf Talents என்கிற வலைத்தளத்தில் குறிப்பிட்ட உணவகத்தின் மேலாளர் Lloyd Gallon என்பவரின் பக்கம் நமக்குக் கிடைத்தது.
மேலும், மரியமே தனது ட்விட்டர் பக்கத்தில், “Lanterns உணவகத்தின் உரிமையாளர் ஒரு இந்தியர். அவருக்கு குறிப்பிட்ட அந்த பிரிட்டிஷ் மேலாளரின் இந்தச்செயலில் சுத்தமாக உடன்பாடு இல்லை. எனவே, அவர் எங்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.
பக்ரைன் உணவகத்தில் ஹிஜாப் அணிந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய இந்திய மேனேஜர் என்பதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Newsofbahrain
Millichronicle
The Week
First Post
Middle East Eye
NRI Affairs
The Daily Tribune
Mariam Naji
*Gulf Talent*
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|