schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைக்கு அணில்களே காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே மின்வெட்டு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக தலைமையிலான அரசில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றுள்ளார்.
மின்வெட்டு பிரச்சினைகள் தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்திருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பேட்டியின்போது அணில்களால் ஏற்படும் மின் தடை குறித்தும் பேசியிருந்தார்.
இந்நிலையில், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம் என்று பாமக தலைவர் ராமதாஸ் அதனை விமர்சனம் செய்திருந்தார்.
மேலும், பலரும் குறிப்பிட்ட அந்த வீடியோ பகுதியை மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இக்குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை என்ன? அணில்களால் இதற்கு முன்பாக மின் தடை எழுந்துள்ளதா? அமைச்சர் உண்மையில் அந்த வீடியோவில் என்ன பேசியிருந்தார்? என்பனவற்றையெல்லாம் குறித்து அறிய வாசகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின் தடைக்கு அணில்கள் மட்டுமே காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்த வீடியோவின் உண்மை நிலைக் குறித்து அறிய அதுகுறித்த முழு தொகுப்பைக் கண்டறிந்தோம்.
அப்போது, குறிப்பிட்ட அந்த வைரல் வீடியோ பகுதி, ஜூன் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, மாலைமுரசு யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்த வீடியோவில் இருந்து கட் செய்யப்பட்டு பரப்பப்படுவது தெரிய வந்தது.
குறிப்பிட்ட அந்த வீடியோவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை, தொடர் மின்வெட்டு புகார்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நிருபர்களால் எழுப்பப்பட்ட நிலையில் அவற்றிற்கு பதிலளித்துள்ளார்.
அப்போது, தமிழ்நாட்டில் முழுவதும் தொடர் மின்வெட்டு புகார்கள் ஆங்காங்கே எழுகிறது என்பது குறித்த கேள்விக்கு, “பொதுவாக ஆங்காங்கே மின் வெட்டு இருக்கிறது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பிட்ட இந்த இடங்களில் மின்வெட்டு இருக்கிறது என்று நீங்கள் கூறினால் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு, தேர்தலை மனதில் வைத்து கடந்த ஆட்சியாளர்கள் மின் பராமரிப்பு பணிகளை முழுவதுமாக முன்னெடுக்கவில்லை. மாதாந்திர பராமரிப்பு பணிகள் முறையாக செய்யப்படவில்லை.
ஆங்காங்கே மரங்கள், செடிகள் வளர்ந்து மின்கம்பிகளில் மோதியிருக்கும். அவற்றை அகற்றும் பணிகள் செய்யப்படவில்லை. இருந்தாலும் இவற்றை குற்றச்சாட்டாக நான் முன் வைக்கவில்லை. ஆனால், அந்தப் பணிகளை இப்போது நாங்கள் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாகவும், மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதன் காரணமாகவும் அவர்களுக்கு மின்வெட்டு இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசிய தேவைகள் தவிர முழுமையான பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு இருக்கக் கூடாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் செடிகள், மரங்கள் வளர்ந்து மின்கம்பிகளில் மோதும் போது அதில் அணில் ஓடுகிறது. அச்சூழ்நிலையில், இரண்டு மின் கம்பிகள் உரசும் நிலையில் அங்கு மின் தடை ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மின்வெட்டு புகார்கள் எழும் நிலையில் அவை சரிசெய்யப்படுகின்றன. ஆனால், முழு ஊரடங்கு காரணமாக முழுமையான பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்கேனும் இதுபோன்ற மின்வெட்டு பிரச்சினைகள் எழுந்தால் அவை முழுமையாக தீர்க்கப்படும். இரவு நேரங்களிலும் அந்ததந்த மாவட்டங்களில் மின் தடை குறித்த நடவடிக்கைகளுக்கு அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
24 மணி நேரமும் செயல்படக்கூடிய துறையாக தமிழகத்தில் மின்சார வாரியம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் மின் தடை புகார்களை விசாரிக்கிறோம். இனி தமிழகத்தில் 100 சதவீதம் மின் தடை இருக்காது. அதற்கான அதிகாரிகள் நியமனம், முன்னெடுப்புகளில் இருக்கிறோம். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு உயர் அழுத்த மின்சாரம் அளிக்கும் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. முந்தைய அரசு கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதா என்பது குறித்து தகவல்கள் கொரோனா தொற்றுக்குப் பிறகு சட்டமன்றம் கூடும்பொழுது தெரிவிக்கப்படும்.” என்று பேசியுள்ளார்.
ஆனால், அதில் அவர் கூறிய உதாரணத்தை மட்டும் வெட்டி தவறான வகையில் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். உங்களுடைய பார்வைக்காக முழு வீடியோவையும் இங்கே இணைத்துள்ளோம்.
மேலும், அணில்களால் மின் தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா இல்லையா? என்கிற விவாதங்களையும் முன்னெடுத்துள்ள நிலையில் இதுகுறித்து ஆராய்ந்தோம்.
அதன் முடிவில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கோபிச் செட்டிப்பாளையத்தில் திடீர் மின் தடையால் 5 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியிருக்கிறது. அந்த மின் தடைக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்தபோது மின்மாற்றியில் அணில் ஒன்று சிக்கியிருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர், அந்த அணில் அகற்றப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது செய்தியாக வெளியாகியுள்ளது.
மேலும், இந்த கருத்து சர்ச்சைக்குரிய வகையில் பாமக நிறுவனர் ராமதாஸால் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான விளக்கத்தை உரிய புகைப்படங்களுடன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அணில்களால் மின் தடை ஏற்படுமா என்பது குறித்து நாம் ஆராய்ந்தபோது பல்வேறு தரவுகள் உலகளாவிய அளவில் நமக்குக் கிடைத்தன. HandWiki என்கிற தளம் Electrical disruptions caused by squirrels என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில் அணில்களால் மின்சாரப் பகிர்வில் தடை ஏற்படுவது சகஜம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே தரவுகள் விக்கிபீடியாவிலும் உள்ளன.
Cool Green Science என்கிற வைல்ட் லைப் சார்ந்த தளம் ஒன்று Fear the Squirrel: How Wildlife Causes Major Power Outages என்கிற தலைப்பில் அணில்கள் மற்றும் ஏனைய சிறு விலங்குகளால் மின்சாரப் பகிர்மானத்தில் ஏற்படும் தடை குறித்து கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
மின்சாரம் மட்டுமின்றி இணையதளம் சார்ந்த குறைபாடுகளிலும் அணில்கள் எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்பது குறித்து Smithsonian மற்றும் The Guardian இதழ்கள் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகணத்தில் அணில்களால் ஏற்பட்ட மின் தடை குறித்த செய்தி city monitor என்கிற பக்கத்தில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த 2018 ஆம் ஆண்டு, ப்ளோரிடா தீம் பார்க்கில் அணில் ஒன்றினால் ஏற்பட்ட மின் தடை குறித்த செய்தி ஒன்று travel leisure இணைய இதழில் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற அமெரிக்காவில் அணில்களால் ஏற்படும் மின் தடை குறித்து The Washington post-ம் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.
எனினும், மின் தடை குறித்த உதாரணங்களில் ஒன்றாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை, முழு மின் தடைக்குமே அணில்கள்தான் காரணம் என்று அவர் தெரிவித்தது போன்று வீடியோ வெட்டப்பட்டு தவறாக பரவுகிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
தமிழகத்தில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைக்கு அணில்களே காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய வீடியோவில், அவர் உதாரணமாக கூறிய பகுதி மட்டும் வெட்டப்பட்டு தவறான தகவலை முன்னெடுக்கும் வகையில் வைரலாகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Malaimurasu: https://www.youtube.com/watch?v=_G_fxtjXHvQ&t=240s
The Washington post: https://www.washingtonpost.com/local/the-bushy-tailed-nut-loving-menace-coming-after-americas-power-grid/2015/12/25/d4b4c2b6-a8db-11e5-9b92-dea7cd4b1a4d_story.html
The Guardian: https://www.theguardian.com/technology/2016/jan/14/power-grid-cybersquirrel1-hackers-cyberwarfare
Travel and Leisure: https://www.travelandleisure.com/travel-news/squirrel-causes-massive-power-outage-busch-gardens-tampa-bay
Senthil Balaji Twitter: https://twitter.com/V_Senthilbalaji/status/1407349703067549697?s=20
City Monitor: https://citymonitor.ai/community/squirrel-caused-massive-power-outage-california-1123
MalaiMalar: https://www.maalaimalar.com/news/district/2021/04/06125909/2514382/Tamil-news-Voting-started-5-minutes-late-due-to-power.vpf
Smithsonian: https://www.smithsonianmag.com/smart-news/move-over-hackers-squirrels-power-grid-greatest-foe-180957834/
Nature.org: https://blog.nature.org/science/2019/10/29/fear-the-squirrel-how-wildlife-causes-major-power-outages/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 7, 2024
Ramkumar Kaliamurthy
December 9, 2022
Vijayalakshmi Balasubramaniyan
February 28, 2022
|