schema:text
| - Fri Jan 31 2025 14:54:48 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: வேங்கைவயல் விவகாரத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாரா விசிக தலைவர்?
வேங்கைவாயல் குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில், பட்டியல் சமூக இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அரசுக்கு மிரட்டல் விடுத்ததாக பொய்யான பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது
Claim :அரசுக்கு மிரட்டல் விடுக்கும் விசிக தலைவர் எனும் தொடங்கும் X பதிவில், வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Fact :பகிரப்படும் காணொளியில் விசிக தலைவர் திருமாவளவன், அரசுக்கு எந்தவித எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என்பதும், அது தவறான நோக்கத்துடன் பகிரப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் 2022-ஆம் ஆண்டில் பட்டியல் சமூக மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய, தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். முன்னதாக, மாநில குற்றப்புலனாய்வுத் துறை (CB-CID), ஆயுதப் படை காவலராக பணியாற்றி வந்த முரளி ராஜா (32), ஆட்டோ ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் (20) ஆகிய மூன்று பேருக்கு சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இம்மூவரும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு தரப்பிலும் இந்த நடவடிக்கையை உறுதி செய்திருந்த நிலையில், விசிக மற்றும் பிற இயக்கங்கள் உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என வலுயுறுத்தி போராட்டங்கள் நடத்தின. சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த மாசுபடுத்தப்பட்ட நீரைக் குடித்த வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த பல குழந்தைகள், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அம்மக்களை சார்ந்த நபர்களையே குற்றவாளிகளாக முன்னிறுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக விசிக தலைவர் தெரிவித்திருந்தார்.
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த வழக்கின் சிபிசிஐடி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், காவல்துறை குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க மு.க.ஸ்டாலின் அரசை வலியுறுத்தினார். இப்போது தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையால், உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இவ்வழக்கை மாற்றுவதில் தடை ஏற்படும் என்றும் கூறினார்.
இந்த நேரத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறி, காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பட்டு வருகிறது.
Vaylamoor karthi (@karthic53579927) எனும் எக்ஸ் பயனர், வைரல் காணொளி ஒன்றை பதிவேற்றி, “அரசுக்கு மிரட்டல் விடுக்கும்
விசிக தலைவர்... வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை...,” என்று பதிவிட்டுள்ளார்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த காணொளி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
எங்கள் விசாரணையைத் தொடங்குவதற்கு முன், வைரலாகப் பரவிய காணொளியைப் பார்த்து, வேங்கைவயல் குடிநீரில் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் கைது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர்கள் உண்மையில் மிரட்டல் விடுத்தார்களா என்பதை சரிபார்த்தோம்.
அந்த வீடியோவில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், "நாங்கள் குற்றப்பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு அந்த வேலையை செய்து வருகிறது. அவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் இதுவரை காவல்துறை ஈடுபட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், அவ்வாறு செய்தால் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும்," என்று கூறுகிறார்.
வைரலாகப் பரவிய பதிவில் கூறப்பட்டுள்ளபடி, அவரது ஊடகப் பேச்சில் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசு எச்சரிக்கை விடுக்கும் தொனியிலோ தொல். திருமாவளவன் பேசவில்லை என்பது வீடியோ ஆய்வில் புலப்பட்டது. மேலும், வேங்கைவயலைச் சேர்ந்த பட்டியல் சமூக மக்களை கைது செய்தால், தங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்பதை திருமாவளவன் பதிவு செய்திருந்தார்.
மேலும், திருமாவளவனின் X (முந்தைய ட்விட்டர்) கணக்கையும் பரிசோதித்தோம்; அதில், ஜனவரி 24 அன்று, அவர் தமிழ்நாடு அரசே முன்வந்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிஐடி) ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அந்த பதிவில் "தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறப்பட்டிருந்தது.
முடிவு: விசாரணையின் முடிவில், வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவன், ஸ்டாலின் அரசுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறுவது, அவர் பதிவு செய்த கூற்றை திரிக்கும் வகையில் உள்ளது. எனவே, வைரலாகப் பரவிய குற்றச்சாட்டு தவறானது என்பது உறுதி செய்யப்பட்டது.
News Summary - As the Vengaivayal water contamination issue rages, a viral post falsely claims the opposition VCK leader Thirumavalavan threatened the government over the arrest of Dalit youth
Claim : அரசுக்கு மிரட்டல் விடுக்கும் விசிக தலைவர் எனும் தொடங்கும் X பதிவில், வேங்கைவயல் குற்றவாளிகளை கைது செய்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
Claimed By : Social Media Users
Claim Reviewed By : Telugupost Fact Check
Claim Source : Social Media
Fact Check : Misleading
Next Story
|