schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: இந்தியாவின் பாராளுமன்றத்திற்கு வழிவழியாக வந்த சோழர்களின் செங்கோல்
Fact: வைரலாகும் செய்தி தவறான புரிதலுடன் பரவுகிறது.
பிரதமர் மோடி கையில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர்கள் கால செங்கோல் அளிக்கப்படும் என்று செய்தி பரவி வருகிறது.
சோழ ராஜ்ஜியத்தின் செங்கோல் பிரதமர் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளது என்பதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைத் தொடர்ந்து இச்செய்தி பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஸ்டெர்லைட் ஆலையை வாங்கவிருக்கும் கனிமொழி எம்பி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
பிரதமர் மோடி கையில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர் கால செங்கோல் ஒப்படைக்கப்பட இருப்பதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
சோழர் காலத்து பெருமை வாய்ந்த செங்கோல் பிரதமர் மோடி கைகளில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது அளிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவும் நிலையில் அதன் பின்னணி குறித்து ஆராய்ந்தோம்.
கடந்த 2021ஆம் ஆண்டில், திருவாடுதுறை ஆதினம் பெயரில் அமைந்துள்ள சமூக வலைத்தளப்பக்கத்தில் செங்கோல் பற்றிய குறிப்பும், முன்னாள் பிரதமர் நேரு செங்கோலைத்தாங்கியிருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
அதில், “செங்கோல் சிறப்பு.#வரலாறு_முக்கியம். பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதிய இரத்தத்தை பாய வைக்கும் செய்தி இது.
மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்…
‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ அடடா! இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது. எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது!
சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர்.எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார்.
மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார்.
எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வரம் வித்வான் ” நாதஸ்வர சக்கரவர்த்தி ” திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும் டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.
அன்றைக்கு பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்க செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்தில் இருந்து சொல்லப்பட்டது.
புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப் பார்த்து அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்று கேட்டார்; ஆதீனமும் கோளறு பதிகத்தை பாட சொன்னார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்’ என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.
அரசுச்சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் இன்று பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாரதத்தின் ஆட்சிமாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைபிடிக்கப்படவேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள இளம் தலைமுறையினர்கள், இந்த வரலாற்றை தெரிந்துகொள்ளும்வண்ணம் இந்த நிகழ்வு பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்யவேண்டும்.
உண்மை வரலாற்றை உரக்க சொல்வோம் இந்த உலகிற்கு!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் திருவாடுதுறை ஆதினம் சார்பில், உம்மிடி பங்காரு நகைக்கடையில் செய்து அளிக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. திருவாடுதுறை ஆதினம் பெயரில் உள்ள சமூக வலைத்தளப்பக்கத்தில் எங்கேயும் அது சோழர்கள் காலத்து செங்கோல் என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும், உம்மிடி பங்காரு நகைக்கடை உம்மிடி பங்காரு செட்டியின் பேரனான ஜிதேந்திர உம்மிடி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சோழர்களின் ஆட்சிக்காலத்தில் எவ்வாறு ஒரு அரசரிடம் இருந்து மற்றொருவரிடம் ஆட்சி மாற்றத்திற்காக செங்கோல் வழங்கப்பட்டதோ அதை ராஜாஜி அவர்கள் வழிமொழிந்து அதன் அடிப்படையில் எங்களுடைய மூதாதையர்களால் இந்த செங்கோல் செய்யப்பட்டு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் அளிக்கப்பட்டது” என்பதாகவே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, உம்மிடி பங்காரு குடும்பத்தைச் சேர்ந்த அமரேந்திரன் உம்மிடியும் பேட்டி அளித்துள்ளார். எனவே, இந்த செங்கோல் 75 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் செய்யப்பட்டது; சோழர்களின் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்பது உறுதியாகிறது.
அதே நேரம், இதுகுறித்த சர்ச்சைகளும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. BBC வெளியிட்டுள்ள கட்டுரையில், “ இந்த செங்கோல் நேருவுக்கு வழக்கப்பட்டது குறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் Time பத்திரிகையின் 1947 ஆகஸ்ட் 25ஆம் தேதியிட்ட இதழ் பின்வருமாறு விவரிக்கிறது” என்று Time இதழின் ஆகஸ்ட் 25, 1947 ஆம் ஆண்டு பதிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில், “தென்னிந்தியாவின் தஞ்சாவூரிலிருந்த ஒரு மடத்தின் தலைவரான ஸ்ரீ அம்பலவான தேசிகரின் இரண்டு தூதர்கள் வந்திருந்தார்கள். இந்தியர்களின் உண்மையான அரசின் முதல் தலைவரான ஜவாஹர்லால் நேரு, பழங்கால இந்திய அரசர்களைப் போல இந்து புனிதத் துறவிகளிடமிருந்து அதிகாரத்தின் சின்னத்தைப் பெற வேண்டுமென அம்பலவான தேசிகர் கருதினார்.
அந்தத் தூதர்களுடன் நாதஸ்வர வித்வான் ஒருவரும் வந்திருந்தார். ஒரு பழைய ஃபோர்டு காரில் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை நேருவின் வீட்டை நோக்கி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர். அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு நூறடிக்கும் இடையில் நின்று சுமார் 15 நிமிடங்கள் நாதஸ்வரத்தை வாசித்தார். மற்றொருவர் ஒரு பெரிய வெள்ளித்தட்டைத் தாங்கி வந்தார். அந்த வெள்ளித்தட்டில் ஜரிகையுடன்கூடிய பீதாம்பரம் இருந்தது.
நேருவின் வீட்டை இறுதியில் அடைந்தவுடன் நாதஸ்வர வித்வான் தனது நாதஸ்வரத்தை வாசிக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் நேருவின் அழைப்பிற்காகக் காத்திருந்தார்கள். பிறகு அவர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு மானின் ரோமத்தால் செய்யப்பட்ட விசிறியைக் கொண்டு இருவர் விசிறினார்கள்.
ஒரு சன்னியாசியிடம் ஐந்தடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 2 அங்குலம் கனமான செங்கோல் இருந்தது. தஞ்சாவூரிலிருந்து எடுத்து வந்த புனித நீரை நேருவின் தலையில் ஒருவர் தெளித்தார். நேருவின் நேற்றியில் விபூதி பூசப்பட்டது. நேருவுக்கு பீதாம்பரத்தைப் போர்த்தி, செங்கோலை அவர்கள் வழங்கினார்கள். அன்று காலையில் நடராஜருக்குப் படைக்கப்பட்டு, விமானத்தில் கொண்டுவரப்பட்ட பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது,” என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா சுதந்திரமடைந்த அன்று வெளியான 1947 ஆம் ஆண்டு Hindu நாளிதழிலும் மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோல் நேருவுக்கு அளிக்கப்பட்டதாக எந்த வாசகங்களுடம் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் BBC தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், The Freedom at Midnight புத்தகத்திலும் இந்நிகழ்வே விவரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதிலிருந்து பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் திருவாடுதுறை ஆதினத்தால் உம்மிடி பங்காரு நகைக்கடையில் செய்யப்பட்டு வழங்கப்பட்டது என்பதும், அது சோழர் காலத்தில் செய்யப்பட்டது அல்ல; சோழர்களின் ஆட்சி மாற்று நெறிமுறையைக் கருத்தில் கொண்டு மட்டுமே செய்யப்பட்டது என்பதாக உறுதியாகிறது.
Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?
பிரதமர் மோடி கையில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர் கால செங்கோல் ஒப்படைக்கப்பட இருப்பதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post From, NamasivayaMoorthi, Dated August 15, 2021
Twitter Post From, ANI, Dated May 24, 2023
Article From, BBC, Dated May 25, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
June 10, 2024
Vasudha Beri
May 16, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 4, 2024
|