schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தனியார் பள்ளியில் இருந்து ஒரு மாணவரை அரசு பள்ளிக்கு மாற்றும்போது அவர்களுடைய மாற்றுச்சான்றிதழ் எனப்படும் டிசி தேவையில்லை; ஆதார் எண் அல்லது EMIS எண் இருந்தால் மட்டும் போதும் என்பதாக வைரல் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் உலகம் முழுவதும் பெரும் மாற்றாங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் கல்வி கற்கும் மாணவர்கள். பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகளைச் செயல்படுத்த முடியாத நிலையில் பிள்ளைகளின் எதிர்காலம் பயம் கொள்ளச் செய்கிறது. மேலும், அரசு சார்ந்தும் ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி வழிக்கல்வி என்கிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும் கிட்டதட்ட ஒன்றரை வருட காலமாக கல்வி சார்ந்த குறைப்பாட்டில் மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
அதே நேரம், அரசு பள்ளிகள் அல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கல்வி கற்க பள்ளிக்கே செல்ல இயலாத நிலை இருக்கும் நிலையிலும் வருடாந்திர பள்ளிக்கட்டணம் செலுத்தியே ஆகவேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஏற்கனவே, பொதுமுடக்கத்தால் பொருளாதாரச் சரிவுகளை சந்தித்து வருகின்ற பெற்றோர்களும் பெரும்பாலான பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாற்றும் எண்ணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், “தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் சேர்க்கும் பொழுது, எந்த ஒரு குழந்தைக்கும் மாற்றுச்சான்றிதழ்(TC) தேவையில்லை. குழந்தையின் ஆதார் எண்ணை நீங்கள் சேர்க்கும் பள்ளியில் கொடுத்தால் போதுமானது. அவர்களாகவே உங்களுடைய EMIS நம்பரை எடுத்துக் கொள்வார்கள். தனியார் பள்ளியில் மாற்றுச் சான்றிதழைக் கேட்டோ அல்லது EMIS நம்பரைக் கேட்டோ பணம் கட்டி ஏமாற வேண்டாம்” என்கிற பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர் ஒருவரைச் சேர்க்க டிசி தேவையில்லை. EMIS எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே போதும் என்று பரவும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.
முதலில், EMIS எண் என்றால் என்ன என்பது குறித்த புரிதலுக்கு Educational management information system என்பதன் சுருக்கமே EMIS ஆகும். இதுகுறித்த மேலதிக விவரங்களை இந்த இணையதளத்தில் காணலாம்.
தொடர்ந்து, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க மாற்றுச்சான்றிதழ் அவசியம் இல்லையா என்பது குறித்த வைரல் பதிவு சார்ந்த சந்தேகங்களை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்களிடம் முன்வைத்தோம்.
இதுகுறித்து அவர், “அப்படி ஒரு விஷயமே கிடையாது. அரசு கல்வி சார்ந்து கூறியுள்ள ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தைக்கு ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றிக் கொள்வதற்கு முழு உரிமையும் உண்டு. அப்படி மாற்றிக்கொள்ள முன்வருகிற குழந்தைகளுக்கு அவர்களுடைய பள்ளி, மாற்றுச்சான்றிதழை அளிக்க வேண்டியது அவசியம்.
ஆனால், எந்த ஒரு பள்ளியும் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் குழந்தைகளை சேர்த்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படவில்லை. EMIS வசதி வந்தபிறகு, மாற்றுச்சான்றிதழ் என்பது இப்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யப்படுகிறது. குழந்தைகளின் விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்து, மாற்றுச் சான்றிதழ் பெற வேண்டியபோது இதிலிருந்தே பிரிண்ட் அவுட்டாக அதனை பெற்று கையொப்பமிட்டு அளிக்கின்றனர்.
எந்த பள்ளியாக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க வேண்டியது அவசியம். அனைவருக்கும் கல்வி உரிமை என்கிற சட்டத்தின் படி, ஒரு குழந்தையை டிசி இல்லை என்கிற காரணத்திற்காக வகுப்பில் உட்கார வைக்காமல் இருக்க முடியாது. ஆனால், அவர்களுடைய முந்தைய பள்ளியில் இருந்து ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மாற்றுச் சான்றிதழைப் பெற்று, புதிய பள்ளியில் அளிப்பதும் அவசியம்.
அதே மாதிரி எந்தவொரு பள்ளியும் குழந்தைகளுக்கு டிசி கொடுக்க முடியாது என்றும் மறுக்க முடியாது. பள்ளிக்கட்டணம் கட்டவில்லை என்றோ, வேறெந்த காரணம் என்றாலும் மாற்றுச்சான்றிதழ் கொடுப்பதற்கு மறுக்க இயலாது. அதே நேரத்தில் தற்போது பரவுகின்ற இந்த செய்தி, கட்டணம் கட்டமுடியவில்லை என்றால் கூட மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் வந்து மற்றொரு பள்ளியில் வந்து இணைந்து கொள்ளலாம் என்பதாகப் பரவுகிறது.
கட்டணம் கட்ட இயலாத சூழ்நிலையில் ஏதேனும் ஒரு தனியார் பள்ளி மாற்றுச்சான்றிதழ் கொடுக்க மறுத்தால், குழந்தையின் கல்வி உரிமைக்கு எதிராக நடந்தால் அதற்கான அதிகாரிகளிடம் பெற்றோர் புகார் அளித்து அதன்மூலமாக மாற்றுச்சான்றிதழைப் பெற்று மற்றொரு பள்ளியிலோ, அரசுப் பள்ளியிலோ இணைத்துக் கொள்ளாலாம். அதே நேரத்தில் பெருந்தொற்று, லாக்டவுன் என்றெல்லாம் கூறி ஒரு குழந்தையை கட்டணத்தைச் செலுத்தாமல் பள்ளியில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது” என்று விளக்கமளித்தார்.
மேலும் இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் கேட்டறிந்தோம். “அரசுப் பள்ளியில் ஒரு குழந்தையை தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெறாமல் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வருகிற வயதுள்ள மாணவர்களுக்கு மட்டுமே உடனடியாக சேர்த்துக் கொள்வது என்பது பொருந்தும். மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கல்வி மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் பெற்ற பிறகே மற்றொரு பள்ளியில் சேர்க்கை அளிக்கப்படும்.
EMIS இணையதளத்தைப் பொருத்தவரையில் அரசின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கல்வி மேலாண்மைத் தகவல் மையம் என்னும் இதில் அது தனியார் பள்ளி மாணவர்களோ, அரசுப்பள்ளி மாணவர்களோ அனைவரது தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு மாணவருக்கும் தனியான அடையாள எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்மூலமாகவே, குறிப்பிட்ட இந்த இணையதளத்தில் உள்நுழைந்து அம்மாணவர் குறித்த ஆதார் எண்ணைப் பதிவு செய்வதோ, மேலதிக விவரங்களோ, மாற்றுச்சான்றிதழ் குறித்த விவரங்களையோ பெற முடியும். ஆனால்,நடைமுறையில் மாணவர்களின் விவரங்கள் பள்ளிகளால் மட்டுமே இதில் பதிவிடப்பட்டு வருகின்ற நிலையில் குறிப்பிட்ட பள்ளி மாணவர்களின் சரியான விவரங்களையோ, தேர்ச்சி விவரங்களையோ இதில் பதிவு செய்யாமல் மற்றொரு பள்ளியில் சேர்க்கை என்பது சிக்கலானது” என்று விளக்கமளித்தார்.
(எனினும், கல்விக்கட்டணம் செலுத்த இயலாத நிலையில் மாணவர்களுக்கு கல்வியை மறுக்கவோ, மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் அழைக்கழிக்கவோ பள்ளிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை; இதுகுறித்து அரசு தக்க தீர்வு காணவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளியில் மாணவர் ஒருவரைச் சேர்க்க டிசி தேவையில்லை. EMIS எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே போதும் என்று பரவும் தகவல் புரிதல் அற்றது; அடிப்படைக் கல்வி அவசியம் என்கிற நடைமுறையின் கீழ் சேர்க்கை நடைபெற்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்னர் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Educationalist Prince Gajendra babu
EMIS website: https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 21, 2023
Vijayalakshmi Balasubramaniyan
May 24, 2021
Vijayalakshmi Balasubramaniyan
June 8, 2021
|