schema:text
| - Wed Feb 12 2025 15:04:04 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?
அமெரிக்க ராணுவ விமானத்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் என்று பகிரப்படும் புகைப்படம் ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது.
Claim :
கள்ளத்தனமாக குடியேறிய வந்தேறிக் கூட்டத்தை அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பும் காட்சி எனப் பரப்படும் புகைப்படம்.Fact :
பரப்படும் புகைப்படம் 2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகள் மீட்கப்பட்டக் காட்சியாகும்.அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டார். இவருக்கான பதவியேற்பு விழா ஜனவரி 20 அன்று நடைபெற்றது. பதவியேற்ற சூட்டுடன் பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது, எல்லைகளை வலுப்படுத்துவது, இரு பாலினம் மட்டுமே போன்ற அறிவிப்புகள் அடங்கும். டிரம்ப் கூறியது போலவே, முறையான ஆவணங்கள் இன்றி குடியேறிய மக்கள் ராணுவ விமானங்கள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதில் பிப்ரவரி 5 அன்று சுமார் 104 பேர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் இதில் அதிகம் இருந்ததாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானத்தில் சட்டவிரோத குடியேறிகளை ஏற்றும் முன், அவர்களின் கை, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்த காணொளி ஒன்றை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை தலைவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்தியாவை குறிப்பிட்டு அதிர்ச்சியை கிளப்பியிருந்தார்.
நாடே இதுபோன்ற நிகழ்வுகளைக் கண்டு கொந்தளித்து போயிருக்கும் வேளையில், விமானத்தின் பயணிகள் கேபினில் கூட்டமாக மக்கள் கீழே அமர்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் உடனான பதிவில், சட்டவிரோதமாகக் குடியேறிய மக்களை அமேரிக்க ராணுவ விமானத்தில் நாடு கடத்துவார்களாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை சிந்தனை (X / @mdunis59) எனும் எக்ஸ் பயனர் பதிவிட்டுள்ளார். அதில், “மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா...
இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் பார்த்தீர்களா?? கள்ளத்தனமாக குடியேறிய வந்தேறிக் கூட்டத்தை அமேரிக்க இராணுவ விமானத்தில் நாடு கடத்துவார்களாம். அதையும் மோடியின் சாதனையாக நினைத்து பெருமையடிக்கும் முன்....
"ராணுவ விமானம்" என்றால் நல்ல சொகுசு வசதிகள் கொண்ட விமானம் என்று பொருள் அல்ல. அதுல கூட்டமதிகமானால் நீங்க குத்தவச்சுதான் வர முடியும். இருக்கை விமானிக்கு மட்டுமே. வேண்டுமானால் சம்மணம் போட்டு இருக்கலாம். விமானம் ஏர் பாக்கெட்டுகளில் குதிக்கும்போது சில சமயங்களில் சிறிய காயங்கள் ஏற்படலாம், ஏனெனில் உங்களுக்கு அடுத்திருப்பவர் கூட உங்கக் கூடவே குதிப்பார். சில நேரங்களில் பெரும் காயங்களும் ஏற்படலாம். விமானத்தில் ஏறும் போது தண்ணீர் பாட்டில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
ஏசி இருக்காது. இந்த விமானத்தில் 1000-2000 பேர் அமரலாம், சாதாரண விமானத்தில் 100-300 பேர் வரை பயணிக்கமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். பெரிய லாரிகள் மற்றும் டாங்கிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இவை. எருமை மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரி போல உங்களை இந்த விமானங்களில் நாடு கடத்துகிறது அமேரிக்கா. மாஸ்டர் ஸ்ட்ரோக் மன்னன் மோடியின் வெளியுறவு கொள்கைகளின் இலட்சணம்தான் பெரும்பான்மையான குஜராத் வந்தேறிகள் அனுபவிக்கிறீர்கள். ஆழ்ந்த இரங்கல்கள்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே பதிவை வினோத் குமார் (Vinoth Kumar C) எனும் முகநூல் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளதையும் காணமுடிந்தது.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், பகிரப்படும் புகைப்படத்தை ஆராய்ந்ததில் அதில் ’அலாமி’ (alamy) என்ற வாட்டர்மார்க் இருந்தது. அலாமி என்பது ஒரு வணிக ரீதியிலான புகைப்பட சந்தைத் தளமாகும்.
எனவே, நேரடியாக தளத்தில் இருக்கும் ‘புகைப்படத்தை புகைப்படம் வாயிலாக தேடும்’ (Search by image) விருப்பத்தை தேர்வு செய்து தேடியதில், இது ஆகஸ்ட் 15, 2021 அன்று ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அதில் கொடுக்கப்பட்ட தகவலில், “காபூல், ஆப்கானிஸ்தான். டிசம்பர் 02, 2021. ஆகஸ்ட் 15, 2021 அன்று ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 640 ஆப்கானிஸ்தான் குடிமக்களை அமெரிக்க விமானப்படையின் C-17 Globemaster III விமானத்தில் பாதுகாப்பாக ஏற்றிச் சென்றது. வெளியேற்றப்பட்டவர்கள் காபூலில் இருந்து அல் உடீட் விமானத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இதே புகைப்படம் சார்ந்து ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளதா என்று ‘கூகுள் புகைப்படம் தேடல்’ சேவை வாயிலாக அலசப்பட்டது. அப்போது, ‘ஃபிரீ பிரஸ் ஜெர்னல்’ (Free Press Journal) செய்தி தளத்தின் எக்ஸ் பக்கத்தில் ஆகஸ்ட் 17, 2021 அன்று காலை 10:52 மணிக்கு ஒரு பதிவிடப்பட்டிருந்தது. இதே புகைப்படத்துடன் கூடிய அந்த பதிவில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைபற்றிய பின் C-17 Globemaster III விமானத்தில் மக்கள் பாதுகாப்பாக இடம் மாற்றப்படுகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், இதே புகைப்படத்தை கொண்ட ஒரு செய்தியை, ‘தி டைம்ஸ்’ (The Times) செய்தித் தளம் வெளியிட்டிருந்தது. ஆக்ஸ்ட் 18, 2021 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியில், காபூலை விட்டு 640 பயணிகளுடன் அமெரிக்க சி-17 விமானம் கிளம்பியது என்று தலைப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
முடிவு:
மேற்கொண்ட ஆய்வுகளின்படி, அமெரிக்க இந்தியர்களை திருப்பி அனுப்புகிறது என்று பகிரப்படும் பதிவில் இணைக்கப்பட்ட புகைப்படம் முற்றிலும் தவறானது எனவும், அது 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எடுக்கப்பட்டது எனவும் சமரசமின்றி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வாயிலாக செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : கள்ளத்தனமாக குடியேறிய வந்தேறிக் கூட்டத்தை அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பும் காட்சி எனப் பரப்படும் புகைப்படம்.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : False
Next Story
|