schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்து விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”அவ்வளவுதான் சோலி முடிஞ்சு போச்சு… எடுங்க எல்லாரும் மூட்டையை கட்டலாம்.. அவனுங்கள நம்மனால ஜெயிக்க முடியுமா.. இனிமேலாவது ஒன்னா இருப்போமா இல்ல அவன் அவன் பிழைச்சா போதும் என்று ஒதுங்கி நின்னு பார்ப்போமா” என்பதாகவும் மேலும் பல்வேறு தகவல்களுடனும் குறிப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. கட்சிப் பாகுபாடு இன்றி பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?
தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்து விரட்டியதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
பல்வேறு செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களைத் தாக்கியதாகவே செய்தியை வெளியிட்டுள்ளன.
முதலாவதாக, இதுகுறித்த விளக்கம் அறிய திருப்பூர் மாவட்ட மேயரான திரு.தினேஷ்குமாரிடம் பேசினோம். அப்போது நம்முடைய கேள்விகளுக்கு விளக்கமளித்த அவர், “இரண்டு தரப்பினருக்கு இடையில் நடைபெற்ற பிரச்சினை சமூக வலைத்தளங்களால் வடமாநில-தமிழக பிரச்சினையாக மாற்றப்படுகிறது. கடந்த ஜனவரி 14 அன்று நடைபெற்ற இச்சம்பவம் தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டு வருகிறது. காவல்துறையும் நானும் இணைந்து இச்சம்பவம் குறித்த தவறான பரவல்களைத் தடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றோம். மேலும், தொழிற்சாலைக்கு வெளியில் இரண்டு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை தமிழகம் – வடமாநிலம் என்பதாக இவ்வாறு வதந்தியாக பரப்புகின்றனர். டீக்கடைக்கு வந்த தமிழக இளைஞர்கள் மற்றும் பனியன் கம்பெனி ஊழியர்கள் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சம்பவம் தமிழக தொழிலாளர்களை அடித்து விரட்டிய வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதாக தவறாக பரவுகிறது. தனிப்பட்ட ஒரு நபர் எடுத்த வீடியோவே தற்போது தவறான தகவலுடன் பரவி வருகிறது” என்றார். இதுகுறித்து தந்திடிவியிலும் விரிவான விளக்கம் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத திருப்பூர் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த வடமாநிலத்தவர் பணி இடைவேளை நேரத்தில் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்றபோது அவர்களுடன் மதுபோதையில் அங்கு வந்த தமிழக நபர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். தங்கள் மீது சிகரெட் புகை பட்டதாகவும் பிரச்சினை செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றி இரண்டு தரப்பிற்கும் இடையே சண்டையாக இது வலுத்துள்ளது. வடமாநில தொழிலாளர்களின் செல்போன் உள்ளிட்டவற்றையும் பிடுங்குவதற்கும் முயற்சித்துள்ளனர் தமிழக நபர்கள். எனவே, குறிப்பிட்ட பனியன் கம்பெனி தொழிலாளர்கள் தங்களது சக தொழிலாளர்களை அழைத்து வந்து தமிழக நபர்களுடன் பிரச்சினை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இதில் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
திருப்பூர் காவல்துறை சார்பில் இதுகுறித்த விளக்கமும் அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இது இரண்டு தரப்பினருக்குள் ஏற்பட்ட பிரச்சினையே; இதை தவறாக பரப்பி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாக இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆனால் இதன் பின்னணித்தகவல் ஒரு வதந்தி என்று தெரிந்தவுடன் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டதாகவும் திருப்பூர் இளைஞர்கள் சிலர் தெரிவித்துள்ள வீடியோவும் பத்திரிக்கையாளர்கள் மூலமாக நமக்குக் கிடைத்தது.
எனவே, திருப்பூரில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற பிரச்சினை தமிழக தொழிலாளர்களை அடித்து விரட்டிய வடமாநிலத் தொழிலாளர்கள் என்பதாகப் பரவுகிறது என்பது தெளிவாகியது.
Also Read: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றாரா அண்ணாமலை?
தமிழக தொழிலாளர்களை வடமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் அடித்து விரட்டியதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறான பின்னணியுடன் பரவுகிறது என்பதுநமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With, Tiruppur Mayor N Dinesh Kumar, Dated January 27, 2023
Twitter Post From, Tiruppur City Police, Dated January 27, 2023
Video From Newschecker Source
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|