schema:text
| - சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என பரவும் தகவல் உண்மையா?
INTRO:
சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “வட மாகாண சபையில்.பதவி பறிக்கப்பட்ட ஊழல் பெருச்சாளி, முன்னாள் மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் தமிழரசில் வன்னித் தேர்தல் தொகுதியில்...
👉தமிழரசு முக்கியஸ்தர் சிவமோகன் குற்றச்சாட்டு” என இம் மாதம் 14 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (14.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற இந்த விடயத்தை ஆராயும் நோக்கில் வைத்தியர் சிவமோகனின் ஊடகவியலாளர் சந்திப்பின் முழுமையான காணொளியை ஆராய்ந்த போது, நேரடியாக பா. சத்தியலிங்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு, ஊழலுடன் அவரைத் தொடர்புபடுத்தவில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அத்துடன் ஊழல்வாதி, உழல்ப்பெருச்சாளி உள்ளிட்ட வார்த்தைப் பிரயோகங்கள் எதையும் அவர் பயன்படுத்தியிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார். " என்னுடைய உரையை முழுமையாகப் பாருங்கள் நான் அதில் யாருடைய பெயரையும் பயன்படுத்தவில்லை, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் பாவிக்கவில்லை, வடமாகாணசபையில் இடம் பெற்ற ஊழல் சம்மந்தப்பட்ட விடயம் எல்லோருக்கும் தெரியும் அதே போன்று விசாரணை அறிக்கையின் முடிவுபற்றியும் எல்லோருக்கும் தெரியும்" என்றார்.
இந்த ஊழல் சம்மந்தப்பட்ட பின்னணி மற்றும் விசாரணை அறிக்கையை ஆராய்ந்த போது , பின்வரும் விடயங்களை அறிய முடிந்தது, 2016 காலப்பகுதியில் வடமாகாணசபையையின் 4 அமைச்சர்களுக்கெதிராக ஊழல்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனை விசாரிப்பதற்காக முதலமைச்சரினால் விசாரணைக்குழுவொன்று 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை அறிக்கையின் படி , பா. சத்தியலிங்கம் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்படடுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் படி, பா.சத்தியலிங்கத்திற்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அவையாவன,
- 2014, மற்றும் 2015 காலப்பகுதியில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாக்கியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் கடைகளிலும் பார்மசிகளிலும் கடமையாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கியமை.
- சுகாதார ஊழியர்களின் சீருடை விநியோகத்தில் நடைபெற்ற முறைகேடு.
- 94 மாகாண வைத்தியசாலைகளுக்கான உணவு விநியோக கேள்வி கோரலில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் தாங்கள் அறிக்கை விட்டிருந்த போதிலும் ஆம் மோடியை வெளிக்கொணர எந்த நடவடிக்கையும் எடுக்காமை.
- வவுனியா வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் கொள்வரவு செய்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் வளங்கிய நிதியை குறிப்பிட்ட நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமை.
- சுகாதாரத் திணைக்களங்களில் பாதுகாப்பு சேவை ஒப்பந்தம் கல்வி கோரலில் தவறாக நடந்து கொண்டமை. என்பதாகும்.
விசாரணைக்குழுவின் அறிக்கையின் முடிவின்படி பாராளுமன்ற. சத்தியலிங்கம் மேற்க்குறிப்பிடப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுமிருந்து விடுக்கப்பட்டார். என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பா.சத்தியலிங்கத்தைத் தொடர்பாக கேட்டபோது " இந்த குற்றச்சாட்டு வடமாகாணசபையின் 4 அமைச்சர்களுக்கெதிராக முன்வைக்கப்பட்டது. இதற்காக விசாரணைக்குழு அமைக்கப்பட்டு முறையான விசாரணை நடைபெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் படி நான் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது என்றார் .
இந்த விடயம் தொடர்பாக மேலதிக விளக்கத்திற்காக, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தைத் தொடர்புகொண்ட போது , அவர் பின்வருமாறு விளக்கமளித்தார்." வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரினால் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் முடிவில் பா.சத்தியலிங்கம் பற்றிய குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். குறித்த அறிக்கையில் முழுமையான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்றார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சத்தியலிங்கம் ஊழல் பெருச்சாளி என சிவமோகன் தெரிவித்த குற்றச்சாட்டு என சிவமோகன் நேரடியாக குறிப்பிடவில்லை மேலும், சத்தியலிங்கம் குறித்த குற்றச்சாட்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு குற்றவாளியல்ல என விசாரணை குழு அறிவித்துள்ளது.
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
|