| schema:text
| - அதிமுக கூட்டணி வெல்லும் என சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?
அதிமுக கூட்டணி வெல்லும் என ஏபிபி நாடு கருத்துக் கணிப்பை சன் நியூஸ் வெளியிட்டதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தவறாக பரவி வருகிறது.
Claim :
அதிமுக கூட்டணி 179 இடங்களில் வெல்லும் என சன் நியூஸ் செய்தி வெளியிட்டதுFact :
திமுக கூட்டணி 179 இடங்களில் வெல்லும் என்றே ஏபிபி நாடு கருத்துக் கணிப்பை சன் நியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளதுதமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - ராமதாஸ் கூட்டணி என ஐந்து அணிகள் உருவாகியுள்ளன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி 200 இடங்களில் வெல்வோம் என்று தெரிவித்து வருகிறது. அதிமுக கூட்டணியும் அதே எண்ணிக்கையை கூறி வருகிறது.
இரு கூட்டணித் தலைவர்களும் பரப்புரையில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அதே சமயம் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.
பரவும் தகவல்
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் என ஏபிபி நாடு எடுத்த கருப்புக் கணிப்பை சன் நியூஸ் வெளியிட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் அதிமுக கூட்டணி 172 - 179 இடங்களைக் கைப்பற்றும், திமுக கூட்டணி 50 - 58 இடங்களைக் கைப்பற்றும், த.வெ.க. 4 -6 இடங்களைக் கைப்பற்றும் என உள்ளது.
amvimalraj_ என்ற எக்ஸ் பதிவர் வைரல் புகைப்படத்தை பகிர்ந்து, “கருத்துக்கணிப்பு... அதிமுக ஆட்சியமைக்கும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Rajiv Bjp என்ற பேஸ்புக் பயனர்,"அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியே ஆட்சி அமைக்கும்.. சன் டிவியே சொல்லிடிச்சு.." என்று தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் பதிவு 1 இணைப்பிலும் அதே புகைப்படம் பகிரப்பட்டு அதிமுக வெல்லும் என கருத்து பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படம் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. உண்மையில் அதிமுக வெல்லும் என ஏபிபி கருத்துக் கணிப்பு வெளியிடவில்லை, அதனை சன் நியூஸ் செய்தியாகவும் வெளியிடவில்லை.
முதலில் ஏபிபி நாடு எடுத்த கருத்து கணிப்பு தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சி என்ன குறிப்பிட்டுள்ளது என்பது குறித்து தேடினோம். ஏப்ரல் 9ம் தேதி ஏபிபி நாடு வெளியிட்ட கருத்துக் கணிப்பு பற்றி சன் நியூஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளதை உறுதிப்படுத்தினோம். அதில் “திமுக கூட்டணி 179 இடங்களைக் கைப்பற்றும் - ABP நாடு” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 172 - 179 இடங்களிலும், அதிமுக கூட்டணி 50 - 58 இடங்களிலும், த.வெ.க. 4 - 6 இடங்களிலும் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சன் நியூஸ் வெளியிட்ட மற்றொரு வீடியோவிலும் திமுக 179 இடங்களில் வெல்லும் என்று ஏபிபி நாடு குறிப்பிட்டுள்ளதாகவே செய்தி உள்ளது.
ABP நாடு வெளியிட்ட கருத்துக் கணிப்பு வீடியோவை சரிபார்த்தபோதும் அதிலும் திமுக கூட்டணி 172 - 179 இடங்களிலும், அதிமுக கூட்டணி 50 - 58 இடங்களிலும் வெல்லும் என்றே குறிப்பிட்டுள்ளது. அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று எந்தக் கருத்துக் கணிப்பும் வெளியிடவில்லை.
வைரலாகும் புகைப்படத்தை சன் நியூஸ் டிஜிட்டல் உதவி ஆசிரியர் தினேஷிடம் அனுப்பி உண்மைத் தன்மை குறித்து கேட்டோம். வைரல் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று தெரிவித்த தினேஷ், திமுக 172 - 179ல் வெல்லும் என்று இருந்த இடத்தில் அதிமுக பெயரை மாற்றி, அதிமுகதான் வெல்லும் என பரப்பப்படுவதாக விளக்கம் அளித்தார்.
மேலும் நமது தேடலில் பலராலும் திமுக 172 - 179 இடங்களில் வெல்லும் என புகைப்படம் பகிரப்படுவதை பதிவு 1, பதிவு 2 கண்டுபிடித்தோம். இது அப்படியே வைரல் புகைப்படத்தை ஒத்திருந்தது. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது திமுக என்று இருந்த இடத்தில் அதிமுக என்று பெயரையும், அதன் சின்னத்தையும் எடிட் செய்து மாற்றி வைத்து அதிமுக வெல்லும் என பரப்பப்படுவது உறுதியானது.
மேலும் வைரல் புகைப்படத்தில் திமுக பெயர் உள்ள இடத்திற்கு அருகே எடிட் செய்யப்பட்ட தடயமும் நமக்கு கிடைத்தது. இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு
அதிமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெல்லும் என ஏபிபி நாடு எடுத்த கருத்துக் கணிப்பை சன் நியூஸ் வெளியிட்டதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. உண்மையில் சன் நியூஸ் திமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெல்லும் என்றே செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
|