schema:text
| - Thu Feb 27 2025 15:06:39 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டதா?
தஞ்சை பெரிய கோயில் தமிழ் கல்வெட்டுகளை அழித்து இந்தியில் கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாக வைரலாகும் காணொளி தவறாக பரப்படுவது உறுதிசெய்யப்பட்டது.
Claim :
தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இருக்கும் தமிழ் மொழி அழிக்கப்படுவதாக பரவும் காணொளி.Fact :
மராட்டியர் ஆட்சி காலத்தில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவக் கல்வெட்டுகளை இந்தி என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே பெரும் விவாதங்கள் நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு செவி சாய்க்காமல் இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால், இந்தி மொழி நுழைந்துவிடும் என்று கூறி, பல அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகிறது. பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் இந்த கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரயில் நிலைய நிறுத்தங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், ஒரு காணொளி ஒன்று இணையத்தில் உலா வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுவும், தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்றுச் சிகரமாக இருக்கும், தமிழ் மொழியை தாங்கி பிடித்திருக்கும் கல்வெட்டுகளுடன் இருக்கும் தஞ்சை பெரிய கோயில் குறித்த அந்த வீடியோ மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக எக்ஸ் பயனர் (இராஜேஷ் / @off_rrajesh) பதிவில், “தமிழ் மொழியை அழிக்க முயற்சி. தஞ்சை சாம்பவர் கோயில்...!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் வைரல் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.
அந்த வீடியோவில் நபர் ஒருவர் பேசுகிறார். அதில், எல்லாருக்கும் வணக்கம். இது தஞ்சாவூர் பெரிய கோயில். இங்கு நாங்கள் பார்த்த மிகவும் அதிர்ச்சியான ஒரு விசயம். இந்தியில் கல்வெட்டு. இது இந்தி எழுத்து என கூறும் நபர், மறுபுறம் இருக்கும் கல்வெட்டை காண்பித்து, இது தமிழ் பிராமி எழுத்து எனவும் ஆதித் தமிழ் எழுத்து எனவும் குறிப்பிடுகிறார். அதை எடுத்துவிட்டு, தற்போது இந்தி கல்வெட்டுகளை மாற்றி வருகின்றனர். இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைப் பாருங்கள் என வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில், ‘aayishafathima_blog’ இல் என்ன இது பித்தலாட்டம் எனும் பதிவுடன் இதே வீடியோ பகிரப்பட்டுள்ளது.
கூடுதலாக தேடும்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ள அதே வீடியோவுடன் கூடிய மற்றொரு பதிவில், “ஐயோ!, படுபாவிகளா! ஆண்டுதோறும் விழா எடுப்பதாகச் சொல்லி கோயில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைச்சிட்டிருக்காங்க! தஞ்சை பெரிய கோயிலில் மொழி அழிப்பு வேலை செய்து வரும் கும்பல் எது? உடனே நடவடிக்கை எடுங்க,” என்று கூறப்பட்டுள்ளது.
வைரல் பதிவின் இணைப்பை இங்கே காணலாம்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், ‘Hindi inscription in Tanjore big temple’ என்று கூகுளில் தேடினோம். அப்போது, கிடைத்த செய்திகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது. 2019-ஆம் ஆண்டில் இருந்தே இதே வீடியோ உலா வருவதை காணமுடிந்தது.
இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ள டெக்கான் குரோனிக்கல் (Deccan Chronicle), "இங்குள்ள பெரிய கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியான காணொளி செய்தியில், இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அந்த கல்வெட்டுகள் ‘இந்தி’யில் இல்லை, ‘தேவனகிரி’ என்றும், மராட்டிய காலத்திலிருந்தே கோயிலில் உள்ளவை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது,” என செய்தி வெளியிட்டிருக்கிறது.
இதேபோல, தினமலர் தளத்திலும் ஏப்ரல் 23, 2019 அன்று, தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில், தமிழில் உள்ள கல்வெட்டுகளுக்கு பதிலாக, ஹிந்தியில் கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை, கோவிலை பராமரிக்கும் தொல்லியல் துறை மறுத்துள்ளது என செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
இதன்படி, இந்த செய்தி பல ஆண்டுகளாகப் பரப்படுகிறது என்பது தெளிவானது. மேலும், தமிழில் ‘தஞ்சை பெரிய கோயில் இந்தி எழுத்து’ என்று தேடினோம். அப்போது, கடந்த ஆண்டு கலைஞர் செய்திகள் தளத்தில் வெளியான ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டிருந்தது. நவம்பர் 19, 2024 பதிவு செய்யப்பட்டிருந்த அந்த செய்தியில், “தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இந்தி எழுத்துகள் என்று பரவும் செய்தி பொய்” என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும், தற்போது அரசுத் தரப்பில் இருந்து ஏதேனும் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்த போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு, (TN Fact Check) இந்த வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்திருந்தது. பிப்ரவரி 21 அன்று அவர்கள் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், இந்த வீடியோவானது 2019-ஆம் ஆண்டில் இருந்தே இணையத்தில் வலம் வருகிறது. அப்போதே இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை விளக்கம் கொடுத்தது. அதன்படி அந்த எழுத்துகள் இந்தி அல்ல என்றும், மராட்டியர் ஆட்சி காலத்தில் கோயிலில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவக் கல்வெட்டுகள் என்றும் தெரிவித்தது. மேலும் தேவநாகரி எழுத்துகளை இந்தி என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்திருந்தது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையில், தஞ்சை பெரிய கோயில் தமிழ் கல்வெட்டுகளை அழித்து, இந்தியில் கல்வெட்டுகள் பதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், மராட்டியர் ஆட்சி காலத்தில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவக் கல்வெட்டுகளை இந்தி என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக இந்தியத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளில் இருக்கும் தமிழ் மொழி அழிக்கப்படுவதாக பரவும் காணொளி.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : False
Next Story
|