schema:text
| - இந்தியாவில் ட்ரோன் மூலம் ஏவுகணை சோதனை நடந்ததாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
இந்தியாவில் ட்ரோன் மூலம் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து விரிவாக பார்ப்போம்.
Claim :
இந்தியாவில் ட்ரோன் மூலம் ஏவுகணை சோதனை நடந்ததாக பரவும் வீடியோFact :
இந்தியாவில் ட்ரோன் ஏவுகணை சோதனை நடந்தது உண்மை. ஆனால், வைரலாகும் வீடியோ துருக்கி நாட்டுடன் தொடர்புடையது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லிய தாக்குதல் மூலமாக இந்தியா அழித்தொழித்தது. இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லையில் சண்டை மூண்டது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் மூலம் அதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
எனினும் சில நாட்களிலேயே இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதே சமயம் உள்நாட்டு பாதுகாப்புக்காக இந்தியா தனது ஆயுதங்கள் வாங்குவது, ஏவுகணை சோதனை செய்வது என ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மைக் காலங்களில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
பரவும் தகவல்
இந்த நிலையில் ட்ரோனில் இருந்து ஏவுகணை ஏவி இந்தியா சோதனை என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ட்ரோனில் இருந்து சீறிப் பாயும் ஏவுகணை இலக்கை தாக்கும் காட்சிகள் உள்ளன.
Sonaiah Baskaran என்ற பேஸ்புக் பயனர், “டிரோனில் இருந்து ஏவுகணை ஏவி சோதனை இந்திய ராணுவத்தின் அடுத்த சாதனை.. பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய ராணுவத்தின் வளர்ச்சி சீறி பாய்கிறது” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
இதே கருத்துடன் வைரல் வீடியோ பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.
முதலில் வைரல் வீடியோவை கூர்ந்து கவனித்தபோது, அதில் இருப்பது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) லோகோ இல்லை என்பதை உறுதி செய்துகொண்டோம். அதே சமயம் Rocketsan என்ற வார்த்தையுடன் வலது புறத்தில் சிவப்பு நிறத்திலான SSB என்ற எழுத்துடன் பிறை வடிவத்தில் லோகோ இருப்பதை கண்டுபிடித்தோம்.
இதனையடுத்து வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் 2021ஆம் ஆண்டே இந்த வீடியோ வெளியாகி இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.
BILGE KAGAN என்ற யூட்யூப் பக்கத்தில் 2021 அக்டோபர் 3ஆம் தேதி இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “துருக்கியில் ROKETSAN ஆல் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்ட லேசர் வழிகாட்டப்பட்ட மினி ஏவுகணை METE, விரைவில் இலக்குகளைத் தாக்கும் என்று பாதுகாப்புத் துறைத் தலைவர் இஸ்மாயில் டெமிர் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Rocketsan மற்றும் SSB என்ற கீ வேர்டுகளை வைத்து கூகுளில் தேடியபோது, Rocketsan என்பது துருக்கி நாட்டின் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதும், SSB என்பது துருக்கி அரசின் பாதுகாப்பு தொழிலக செயலகம் என்பதும் தெரியவந்தது.
மேலும் நம்முடைய தேடலில் துருக்கி பாதுகாப்புத் தொழில்துறை தலைவராக உள்ள இஸ்மாயில் டெமிர் தனது எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோவைப் பகிர்ந்து, “லேசர் வழிகாட்டுதலில் செயல்படும் மினி ஏவுகணை METE வருகிறது. ராக்கெட்சன் உருவாக்கிய இந்த ஏவுகணை சோதனை கட்டத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார். துருக்கி மொழி இணையதளமான bursada bugun இதுகுறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாகும் வீடியோ, இந்தியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் ஏவுகணை சோதனை அல்ல என்பதும், துருக்கி நாட்டில் நடத்தப்பட்ட மினி ஏவுகணை சோதனை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் ட்ரோன் ஏவுகணை சோதனை நடந்ததா?
எனினும் இந்தியாவில் அண்மையில் ஏதேனும் ஏவுகணை சோதனை நடந்துள்ளதாக என TeluguPost உண்மை கண்டறியும் குழு தேடியது. டைம்ஸ் ஆப் இந்தியா ஜூலை 25ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் உள்ள தேசிய திறந்தவெளிப் பகுதி வரம்பில் (NOAR) இந்தியா வெற்றிகரமாக UAV அதாவது ட்ரோன் மூலம் ஏவப்படும் துல்லிய வழிகாட்டுதல் ஏவுகணை (ULPGM)-V3 சோதனைகளை மேற்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
என்டிடிவி யூட்யூப் பக்கத்தில், ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை என்று குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் உறுதிப்படுத்துதலுக்காக DRDO எக்ஸ் பக்கத்தில் நாம் தேடியபோது, ட்ரோன் மூலம் ஏவுகணை சோதனை நடைபெற்ற வீடியோ பகிரப்பட்டு இருந்தது.
முடிவு
ட்ரோனில் இருந்து ஏவுகணை ஏவி இந்தியா சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது உண்மைதான். ஆனால், ட்ரோன் ஏவுகணை சோதனை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ, துருக்கி நாட்டில் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
|